ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’ – யின் முதல் தொகுதி வெளியீடு.!

ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி – யின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான சிவில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் கமலேயா தேசிய தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘காம்-கோவிட்_வெக்’ என்பதனை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ‘ ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியாக சுகாதார அமைச்சகம் பதிவு செய்தது. இந்த நிலையில் ரோஸ் டிராவ்னாட்ஸரின் ஆய்வகத்தில் நடந்த பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் தடுப்பூசியின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ரஷ்ய தலைநகரில் வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை போடுவார்கள் என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் ஞாயிற்றுக்கிழமை அன்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதியை நாட்டிலுள்ள பிராந்தியங்களுக்கு எதிர்காலத்தில் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.