கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி…!

நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி  தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்தியா முழுவதும் செப்.12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம்  வெளியாகியுள்ளது.

இந்த நீட் தேர்வில், கோவையில் முதல் தலைமுறையாக மலசர் பழங்குடி மாணவி  தேர்ச்சி பெற்றுள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி (வயது 20). மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி சங்கவி, தன்னுடைய சாதி சான்றிதழ் வாங்க கடுமையாக போராடி வெற்றி பெற்ற நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறவும் கடுமையாக பேராடி வெற்றி கண்டுள்ளார். இதுகுறித்து மாணவி கூறுகையில், ‘என்னுடைய வெற்றி என் கிராமத்தின் வெற்றியென மாணவி பெருமிதம்’ என தெரிவித்துள்ளார்.

மாணவி சங்கவி, நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.