Monday, June 3, 2024

ஆளுநர் ரவிக்கு எதிரான செயல்பாடு.. அமைச்சர் பொன்முடி குறிவைக்கப்படுகிறார்.! திமுக வழக்கறிஞர் விமர்சனம்.!

ஆளுநர் ரவியை கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்ப்பதால் அமைச்சர் பொன்முடி குறிவைக்கப்படுகிறார் என திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். 

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக நேற்று காலை 7:00 மணி முதல் சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் திமுக எம்பி கௌதம சிகாமணி ஆகியோர் வீடு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 9 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. இதில் ஒரு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு திமுக எம்.பி கௌதம சிகாமணி மற்றும் அமைச்சர் பொன்முடி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 7 மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீடு திரும்பினர்.

இந்நிலையில் இந்த அமலாக்கத்துறை விசாரணை சோதனை தொடர்பாக திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 2007ல் தொடுக்கப்பட்ட வழக்கில், இப்போது விசாரணை நடத்தி எந்த ஆதாரங்களை வீட்டிற்குள் தேட போகிறீர்கள் என்று அமலாக்கத்துறை விசாரணை குறித்து விமர்சித்தார்.

மேலும் 70 வயதை கடந்த ஒரு நபரை (அமைச்சர் பொன்முடி) நேற்று காலை முதல் இன்று விடியற்காலை காலை 3 மணி வரை தொடர்ந்து விசாரணை நடத்திய உள்ளனர். ஏன் இந்த விசாரணையை இன்று நடத்தினால் ஆதாரங்கள் எதுவும் அழிந்து விடுமா? என்று கேள்வி எழுப்பினர். அடுத்ததாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கொள்கை ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எதிர்த்தவர் பொன்முடி அதனால் தான் அவர் குறிவைக்கப்படுகிறார் என்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.

RELATED ARTICLES