டோக்கியோ ஒலிம்பிக்:ஹோட்டலில் இருந்து காணாமல் போன உகாண்டா வீரர்…!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான பயிற்சி முகாமின் போது உகாண்டா நாட்டின் பளுதூக்கும் வீரர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் பரவிவரும் நிலையில்,ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23 ஆம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனால்,வெளிநாட்டினரின் வருகை மற்றும் கொரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் ஜப்பான் பெரும் அதிர்ச்சியைக் கொண்டுள்ளது.இதனால்,ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஒலிம்பிக் அசோசியேட்டட் அளித்த அறிக்கையின்படி :”ஒசாகா மாகாணத்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகள், உகாண்டா தேசிய அணியின் 20 வயது பளுதூக்கும் வீரரான ஜூலியஸ் செசிட்டோலெகோவை தேடி வருகின்றனர்.கொரோனா பரிசோதனைக்காக அவரது ஹோட்டல் அறைக்கு சென்ற அதிகாரிகள்,அறை காலியாக இருப்பதைக் கண்டதால் ,செசிடோலெகோ இல்லை என்பதை உணர்ந்தனர்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,உகாண்டா பளுதூக்குதல் கூட்டமைப்பின் தலைவர் சாம் முசோக் கூறுகையில்:”இளம் வீரரான செசிட்டோலெகோ சமீபத்தில் ஆப்பிரிக்கா பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். இதனால்,அவர் அனுபவம் வாய்ந்தவராக கருதப்பட்டார்.அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, எனவே வெற்றிபெற அவரிடமிருந்து நிறைய ஆர்வமும் ஆற்றலும் தேவை.

ஆனால், செசிட்டோலெகோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். மேலும்,ஜூலை 20 ஆம் தேதி உகாண்டாவுக்குத் திரும்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தார்”, என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,உகாண்டா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் டொனால்ட் ருகாரே கூறுகையில்: “காணாமல் போன வீரர் குறித்து அதிகாரிகளுக்கு மட்டுமே தகவல் அளிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,நாங்கள் என்ன நடந்தது என்பதையும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.அதற்காக, ஒசாக்காவில் உள்ள அணியுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம்”,என்றார்.

ஒலிம்பிக் பயிற்சி முகாம்களில் உள்ள அணிகள் தங்களின் ஹோட்டல்களுக்கும் பயிற்சி தளங்களுக்கும் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.மேலும் சுதந்திரமாக சுற்றுவதற்கும் உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒலிம்பிக் பங்கேற்பாளர்கள் சில விதிகளை மீறியதாக தகவல்கள் வெளியாகின்றன.இதனால்,விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட வீரர்களை விசாரித்து தண்டிக்குமாறு ஒலிம்பிக் அமைப்பாளர்களை ஜப்பான் அரசாங்கம் கேட்டுக் கொண்டதாக நேற்று தெரிவித்துள்ளது.