பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம் ..!

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு தடை விதிக்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளர் பாபா ராம்தேவ்,சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றும், கொரோனா சிகிச்சை முறையில் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர்களைவிட, அலோபதி மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் எனக் கூறினார்.

பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.இதற்கு,பாபா ராம்தேவ் சார்பில் ஒரு அறிக்கை ஓன்று வெளியிடப்பட்டது.

அதில் தனது கருத்தை திரும்பப் பெறுவதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் மாநில கிளை “நவீன மருத்துவத்தை தவறாகப் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரூ.1000 கோடி இழப்பீடு தரவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனைத் தொடர்ந்து,இந்திய மருத்துவர் சங்கம்,பாபா ராம்தேவ், கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான பிரசாரம் செய்கிறார்.அதனால் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,அலோபதி குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும்,இதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில்,”அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்து,சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது.எனவே,அவர் தனது சொந்த கருத்தை தெரிவித்ததற்கு இவ்வளவு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன?.

மேலும்,வழக்கு தொடர்ந்த நேரத்தில் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே?”,என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து,பாபா ராம்தேவ் தனது கொரோனில் மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்தி வருவதால் அதற்கு விளக்கம் கேட்டும்,வழக்கை ஜூலை 13 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்துள்ளது.இருப்பினும்,அதுவரை எந்தவிதமான சர்ச்சை அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று பாபா ராம்தேவிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.