ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழக மாணவர்களின் உடலை விரைந்து மீட்க வேண்டும் – வைகோ!

ரஷ்ய ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 தமிழக மாணவர்களின் உடல்களை விரைந்து மீட்கவேண்டும் என வைகோ வலியுறுத்தல்.

ரஷ்யாவில் வோல்கோகிராட் மாகாணத்தில் உள்ள வோல்கோகிராட் மாகாண மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த தமிழகத்தை சேர்ந்த முகம்மது ஆசிக், மனோஜ் ஆனந்த், ஸ்டீபன் விக்னேஷ் ஆகிய நான்கு மாணவர்களும் கடந்த வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிப்பதற்காக வோல்கா ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்கள் நால்வரும் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆனால் இவர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து மதிமுக நிறுவனர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டிய மாணவர்களின் எதிர்பாராத உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரஷ்ய ஆற்றில் மூழ்கி இறந்து போன 4 தமிழக மாணவர்களின் உடல்களையும் விரைந்து தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் பல லட்சம் ரூபாய் கல்விக் கடன் பெற்று தங்கள் பிள்ளைகளை சிறந்த மருத்துவர்களாக உருவாக்க வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து பெற்றோர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்கிற வகையில் தமிழக அரசு அவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal