விண்வெளியிலிருந்து யூரோ கோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளித்த விண்வெளி வீரர்..!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். 

நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் இந்த போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். இதை அவர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துகொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.