சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.  ஃபாா்முலா ரேஸிங் சா்க்யூட் இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் சா்க்யூட் பந்தயங்களான ‘பாா்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘இந்தியன் ரேசிங் லீக்’ காா் பந்தயங்கள் இம்மாதம் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.

அதன்படி, வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ. சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுவதாக இருந்தது. இதற்கிடையில், வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பொழிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீட்பு பணிகள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்!

இதனால், சென்னை  உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது இதுதொடர்பான அறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் வெளியேற்றம், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், டிச.9 மற்றும் 10ம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த சென்னை ஃபார்முலா ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தய நிகழ்வுகள் தமிழ்நாடு அரசால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்