சிராஜ் மற்றும் பும்ராவை இனரீதியாக இழிவுப்படுத்திய ஆஸ்திரேலிய ரசிகர்கள்!

சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இனரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதால் நடுவர் மற்றும் மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 7 ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 105.4 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் இழந்து, 338 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து 94 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி, தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்ததால், 197 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில், சிட்னி மைதானத்தில் நடந்த 2 மற்றும் 3 ஆம் நாள் போட்டியில் இந்திய வீரர்களான சிராஜ் மற்றும் பும்ராவை இன ரீதியாக ரசிகர்கள் இழிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் ரஹானே, அஷ்வின், நடுவர்களாக பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்துள்ளனர். மேலும், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது.