அதிர்ச்சி…கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி;சகோதரிக்கும் பாதிப்பு உறுதி!

கேரளாவின் கோழிக்கோட்டில் 12 வயது சிறுமி எச்1என்1 நோயால்(பன்றிக் காய்ச்சலால்) உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில்,இதனை தடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் என்ற தொற்று பல நாடுகளில் பரவி வருகிறது.குறிப்பாக ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இது அதிகளவு பரவி வருகிறது.

இந்நிலையில்,கேரளாவின் கோழிக்கோடு உள்ளியேரி பகுதியில் வசித்து வந்த 12 வயது சிறுமி எச்1என்1 தொற்றால்(பன்றிக் காய்ச்சலால்) பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் கோழிக்கோடு கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.பின்னர்,கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி மாற்றப்பட்டார்.

முன்னதாக பெங்களூரில் இருந்து திரும்பிய பிறகு,சிறுமிக்கு சில அறிகுறிகள் தென்பட்டன எனவும்,அதன்பின்னர் எடுக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் எச்1என்1 உறுதியானது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில்,தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் சகோதரிக்கும் H1N1 இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தற்போது அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

H1N1 வைரஸ்:

பன்றிக் காய்ச்சல் (H1N1) தொற்று என்பது,இருமல் மற்றும் தும்மல், மறைமுக தொடர்பு மற்றும் நெருங்கிய தொடர்பு காரணமாக பரவும். குறிப்பாக,ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவும் ஒரு தன்னியக்க வைரஸ் மற்றும் காற்றில் பரவும் நோயாகும்.

இதனிடையே,உலக சுகாதார அமைப்பு (WHO) ஏப்ரல் 2009 இல் H1N1 வைரஸிற்கான முதல் பொது சுகாதார அவசரநிலையை அறிவித்தது.ஏனெனில்,இந்த தொற்றுநோயால் சுமார் 2,84,500 பேர் உயிரிழந்தனர்.அதே நேரத்தில் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment