கர்நாடகா: மதச்சார்பற்ற ஜனதா தள மாநில தலைவர் நீக்கம்!

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில பதிவில் இருந்து இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கர்நாடகா முன்னாள் முதல்வர் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி கடந்த மாதம்  டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவகவுடாவும் உறுதிப்படுத்தினார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநில பிரிவுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், கர்நாடகாவில் முஸ்லிம் தலைவர்கள் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்தனர். அந்தவகையில், கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் இப்ராஹிம், பாஜகவுடனான கூட்டணியை கடுமையாக எதிர்த்து வந்தார்.

பாஜகவுடனான கூட்டணியை தமது தலைமையிலான கர்நாடகா மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்காது என கூறியிருந்தார். இதன் மூலமாக கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில பதிவில் இருந்து இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மாநில தலைவர் பதவியில் இருந்து இப்ராகிமை நீக்கிவிட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவர் எச்.டி தேவகவுடா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்கும் என அறிவித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், கூட்டணியை தனி ஒருவர் மட்டுமே முடிவு செய்ய முடியாது என்று இப்ராகிம் விமர்சித்திருந்த நிலையில், தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்