பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், உடனடியாக இதை செய்யுங்கள் – ராமதாஸ்

அலட்சியம் காட்டாமல் 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் வலியுறுத்தல்.

பள்ளிக் குழந்தைகள் உடல்நலனில் விளையாட வேண்டாம், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவியுங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பல வகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. 3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல.

காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுனர்கள் உறுதி செய்திருக்கின்றனர். புதுச்சேரியில் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது.

தமிழ்நாட்டிலும் நோய்ப் பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும். மாணவர்களுக்கு கல்வி அவசியம், அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக H1N1 என்ற இன்புளுயென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் பரவலை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என ஓபிஎஸ், ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்படுகிறது. பாதிப்பு அதிகம் இல்லாததால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து வருகிறார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment