#Breaking:ஏடிஎம் கொள்ளை;ஒப்புதல் வாக்குமூலம் -மேலும் ஒருவர் கைது…!

ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அமீர் என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில்,அவரது நண்பர் வீரேந்தரை போலீசார் டெல்லியில் இன்று கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரங்கேறியுள்ளது.சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள  தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதி என இரண்டு நாட்கள் இந்த பணம் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் வரை பணம் திருடப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக டெபாசிட் வசதி கொண்ட ஏடிஎம்களில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதனையடுத்து, டெபாசிட் வசதி கொண்ட எஸ்பிஐ வங்கிகளில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.இது தொடர்பாக தனிப்படை போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த வகையில்,கொள்ளையில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்து,தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து,கொள்ளையில் ஈடுபட்டது தொடர்பாக அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.அதன்படி,தனது நண்பர் வீரேந்தருடன் சேர்ந்து 6 இடங்களில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதாகவும், ராமாபுரம், சின்மயா நகர்,பாண்டிபஜார், வடபழனி,வேளச்சேரி மற்றும் தரமணி ஆகிய எஸ்பிஐ  கிளைகளில் மட்டும் கொள்ளையில் ஈடுபட்டதாக அமீர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,கொள்ளையடித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் அமீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதனையடுத்து,அந்த வங்கி கணக்கு யாருடையது?,வீரேந்தர் என்பவர் எங்கு உள்ளார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,அமீரின் நண்பர் வீரேந்தரை போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர்.