தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வீட்டில் ரூ.15 லட்சம் பறிமுதல்!

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக தகவல்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து வரும் வெங்கடாசலத்தின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெங்கடாசலம் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை சேர்த்ததாக கிடைத்த தகவலின்படி, 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு ஆளாகி உள்ள வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர். அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்றதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றசாட்டியுள்ளனர். இன்று அவரது வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெங்கடாசலம் வீட்டில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 நாள் அவரச கூட்டத்திற்கு வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கிய பின்னணியில் பெரும் லஞ்சம் கைமாறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த சோதனை நாளை வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்