Congress MP Rahul gandhi

நான் பேசியதை சேர்த்தே ஆக வேண்டும்… ராகுல் காந்தி பரபரப்பு கடிதம்.!

By

டெல்லி: நேற்று மக்களவையில் நான் பேசியதில் நீக்கிய பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவையில் நேற்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்களாகவே தற்போதும் உள்ளனர். பிரதமர் மோடி, பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் இல்லை என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

மேலும், அக்னிவீர் திட்டம் வீரர்களை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிவது போல உள்ளது. இந்த திட்டத்தால் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம், இழப்பீடு கிடைக்கப்பெறவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மக்களவையில் ராகுல் காந்தி பேசியது ஆதாரமற்ற குற்றசாட்டு என பாஜக எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனை அடுத்து,  ராகுல் காந்தி பேசிய குறிப்பிட்ட கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

ராகுல் காந்தி பேசிய கருத்துக்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,  மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவது உறுப்பினர்களின் கடமை. அதன்படி தான் நான் கருத்துக்களை பதிவு செய்துள்ளேன். என்னுடைய பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்கியது மக்களவை ஜனநாயகத்திற்கு எதிரானது. நீக்கப்பட்ட எனது பேச்சை அவை குறிப்பில் சேர்க்க வேண்டும். மக்களவை சட்டவிதி 105இன் கீழ் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேச்சுரிமை உள்ளது என சபாநாயகருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Dinasuvadu Media @2023