9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘சைக்கோ’ படம்..!

தென் இந்திய நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ. இந்த படத்தை டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் இந்தப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான சைமா 2020-ல் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவை சிறந்த இயக்கம் (மிஷ்கின்), முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் – உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் – உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (டபுள் மீனீங் புரடக்‌ஷன்ஸ்), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்), சிறந்த வில்லன் (ராஜ்குமார் பிச்சுமணி), சிறந்த அறிமுக நடிகர்(ராஜ்குமார் பிச்சுமணி) ஆகிய 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சைமா 2020 விருது விழா ஹைதராபாத்தில் வரும் செப்டம்பர் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.