பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை.! பிரதமர் மோடி உறுதி.! 

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் புகழை போற்றும் வகையில் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். 

இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்று சென்றடைந்தார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பாரிஸில் இன்று நடைபெற உள்ள தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் மிக உயரிய விருதை வழங்கினார். இந்த விருது இராணுவத்தில் மிக உயர்ந்த பிரெஞ்சு கௌரவமாகும். இந்த பெருமையை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, அங்கு பிரதமரின் வருகையினை ஒட்டி பிரான்ஸ் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் தமிழ் மொழி மிக பழமையான மொழி என குறிப்பிட்டு,

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்” – எனும் திருக்குறளை குறிப்பிட்டு, இந்திய பொருளாதார உயர்வுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கும் முக்கியம் என குறிப்பிட்டு பேசினார். மேலும் பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்றும் பிரதமர் மோடி அந்த விழாவில் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் தேசிய விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் . இந்த பயணத்தின்போது, கடற்படைக்கு தேவையான 26 ரஃபேல்-எம் போர் விமானங்களை கொள்முதல் செய்வது, மும்பை கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதற்கான ஒப்புதல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.