நமீபியாவிலிருந்து வந்த சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்த பிரதமர் மோடி

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார் பிரதமர் மோடி.

இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து வரவழைக்கப்படுவதாக மத்தியபிரதேச தலைமை வனப்பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான் தெரிவித்திருந்தார். அந்த 8 சிறுத்தைகள் இன்று காலை கார்கோ விமானம் மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியருக்கு வந்தடைந்தது. சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் அவை சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு வரவழைக்கப்பட்டது.

இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது 72 ஆவது பிறந்த நாளான இன்று மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் “சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டமாக” திறந்து விடுவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆப்ரிக்கா நாடான நமீபியாவில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட சீட்டா வகை 8 சிறுத்தைகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய சரணாலயத்தில் விடுவித்தார் பிரதமர் மோடி. சிறுத்தைகளை வனத்தில் விடுவித்ததுடன் அவற்றை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

செயற்கைகோள் மூலம் கண்காணிக்க 8 சீட்டா வகை சிறுத்தைகளில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது. குனோ பால்பூர் தேசிய பூங்காவில் விஷேசமாக வடிவமைக்கப்பட்ட தனிமையான சூழல் போன்ற வீட்டில் சீட்டா வகை சிறுத்தைகள் அடைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு சீட்டா வகை சிறுத்தைகள் மேலும் பழகுவதற்காக பெரிய கூண்டில் வைக்கப்பட உள்ளது. இந்திய காடுகளில் மீண்டும் வாழவைக்கும் விதமாக சீட்டா வகை சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு வந்த சிறுத்தைககளை அறிமுகப்படுத்தும் நிகழ்வானது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது. 1948-இல் சட்டிஸ்கர் மாநிலம் கொரியா மாவட்டத்தில் இந்தியாவின் கடைசி சிறுத்தை இறந்தது. அதன் பின் 1952-இல் இந்தியாவில் சிறுத்தை இனம் அடியோடு அழிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் தற்போது இந்தியாவில் சிறுத்தைகளின் இனத்தைப் பெருக்க, நமீபியாவிலிருந்து 5 பெண் சிறுத்தைகள் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டன . அவற்றை பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேசத்தின் குனோ பால்பூர் தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment