PM Modi speech in New Parliament

இன்று சிறப்பான நாள்.! சுதந்திரத்துக்கு பிறகு முதன் முறையாக… பிரதமர் மோடி பெருமிதம்.!

By

டெல்லி: தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக 18வது மக்களவை கூட்டத்தொடர் இன்று புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாக தற்காலிக மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி பர்த்ருஹரி மஹ்தப்விற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அதனை அடுத்து, புதிய தற்காலிக சபாநாயகர் மற்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். புதிய உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்து கொண்டிருக்கும் வேளையில், நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறுகையில், இன்று நமது ஜனநாயகத்தில் ஒரு புகழ்பெற்ற நாள். நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக, நமது சொந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எம்பிக்கள் பதவியேற்று கொள்கின்றனர்.  இதுவரை இந்த நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்தது. இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் மனதார வரவேற்கிறேன். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

18வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிக பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடைபெற்று முடிந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தற்போது மாறியுள்ளது.  மூன்றாவது முறையாக நமது அரசாங்கத்திற்கு பணியாற்ற நமது நாடு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது.

நாட்டு மக்கள் எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தின் மாண்பை நிலைநாட்ட எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவர்கள் என நம்புகிறேன். வீண் நாடகம், அமளி நாடாளுமன்றத்தில் வேண்டாம். மக்களுக்கு நல்ல பலன்கள் தேவை, வெறும் கோஷங்கள் வேண்டாம். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி, பொறுப்புள்ள எதிர்க்கட்சி தேவை, இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாட்டு மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். இது மாபெரும் வெற்றி, எங்களின் பொறுப்பு மும்மடங்கு அதிகரித்தது. எனவே, மூன்றாவது பதவிக்காலத்தில், நாங்கள் மூன்று மடங்கு கடினமாக உழைத்து, மூன்று மடங்கு பலன்களை பெறுவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றினார்.

Dinasuvadu Media @2023