ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்ட சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ள நிலையில் ,பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று  தமிழகம் வந்துள்ளார்.நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்த பிரதமர் மோடி மேடையில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்  மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.பின்பு பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்கள்.

இதனையடுத்து  பிரதமர் மோடி  ரூ.3770 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் பகுதி-1 விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். வண்ணாரப்பேட்டையிலிருந்து, விம்கோ நகர் வரையிலான பயணிகள் ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை கடற்கரைக்கும், அத்திப்பட்டுக்கும் இடையிலான நான்காவது ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.இந்த 22.1 கி.மீ. நீள பிரிவு, ரூ.293.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர் பிரிவுகளில் ரூ.423 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள ஒற்றை லைன் மின்மயமாக்கத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நவீன அர்ஜூன் முக்கிய போர் பீரங்கி வண்டியை ( எம்கே-1ஏ) இந்திய ராணுவத்திடம் பிரதமர் ஒப்படைத்தார். கல்லணை வாய்க்காலை புதுப்பித்து, நவீனப்படுத்தி, விரிவாக்கம் செய்வற்கான பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.இந்தக் கால்வாயை நவீனப்படுத்தும் பணிகள் ரூ.2640 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை ஐஐடி டிஸ்கவரி வளாகத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.சன்னைக்கு அருகே, தையூர் என்னுமிடத்தில், ரூ.1000 கோடி மதிப்பில் இந்த வளாகத்தின் முதல் பகுதி, 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.