, ,

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா..! கண்டுபிடித்து தகவல் அனுப்பிய லேண்டர்.!

By

Plasma

கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பல்வேறு கட்டங்களாக பூமி மற்றும் நிலவை சுற்றி வந்தநிலையில், வெற்றிகரமாக நிலவில் இறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

லேண்டரானது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய பின், லேண்டர் உட் பகுதியில் இருந்து வெளிவந்த ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கி நிலவில் ஒரு நிலவு நாள் (14 நாட்கள்) ஆயுள்காலத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், ரோவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு அப்டேட்களையும் இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தற்போது, விக்ரம் லேண்டரில் இருக்கக்கூடிய RAMBHA-LP ஆய்வு கருவி, இதுவரை செய்திருக்கக்கூடிய முதற்கட்ட ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “சந்திரயான்-3 லேண்டரில் உள்ள ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பௌண்ட் ஹைபர்சென்சிட்டிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர் – லாங்முயர் ஆய்வு (RAMBHA-LP) பேலோட் ஆனது தென் துருவப் பகுதியில் நிலவின் பிளாஸ்மா சூழலை முதன்முதலில் அளவீடு செய்துள்ளது.”

“ஆரம்ப மதிப்பீடு சந்திர மேற்பரப்புக்கு அருகில் உள்ள பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. இந்த அளவு அளவீடுகள் சந்திர பிளாஸ்மா ரேடியோ அலை தகவல்தொடர்புகளில் அறிமுகப்படுத்தும் இரைச்சலைத் தணிக்க உதவும். மேலும், வரவிருக்கும் சந்திர பார்வையாளர்களுக்கான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புகளுக்கு அவர்கள் பங்களிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையில், “நிலவின் தென் துருவப் பகுதியின் மேற்பரப்பிற்கு அருகே பிளாஸ்மா அயனிகள் இருப்பதாக RAMBHA-LP பேலோட் கண்டறிந்து முதல் இடநிலை அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திர மேற்பரப்பை உள்ளடக்கிய பிளாஸ்மா ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 5 முதல் 30 மில்லியன் எலக்ட்ரான்கள் வரையிலான அடர்த்தியைக் கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.