கண்கள் “இளஞ்சிவப்பு” நிறமாக இருந்தால் கொரோனாவுக்கான அறிகுறி- புதிய தகவல்!

கொரோனாவுக்கான அறிகுறிகளான இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவற்றை தொடர்ந்து, தற்பொழுது கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதுவும் கொரோனா அறிகுறி என நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

சீனா, வுஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் உலகளவில் இதுவரை 87,57,748 பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4,62,519 பேர் உயிரிழந்த நிலையில், 46,25,445 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வைரஸின் தாக்கத்தை தடுக்கும் விதமாக, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால், இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை. மேலும், இந்த கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள், இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஆகும்.

இதுமட்டுமின்றி, தற்பொழுது நோய் அறிகுறிகள் புதிது புதிதாக உருவாகி வருகின்றன. அந்த வகையில், கண்கள் “இளஞ்சிவப்பு” (Pink) நிறமாக மாறினால், அது கொரோனா அறிகுறிகளில் ஒன்று என நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், கொரோனா பாதித்தோரில் 10-15 சதவீத மக்களுக்கு கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரான கார்லோஸ் சோலார்ட்டே கூறினார்.