10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி மனுதாக்கல்.!

10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.

சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவித்தார். அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் , கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில் தேர்வு நடத்தினால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றும், தேர்வு மையம் வருவதற்கான உரிய போக்குவரத்து வசதி செய்யாத நிலையில் தேர்வு நடத்தப்படக் கூடாது என தெரிவித்து இருந்தார்.

ஆசிரியர் சங்க சார்பில் தாக்கல் செய்த மனு இந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்..? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா மனுவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Dinasuvadu desk