பெருவில் கட்டுக்கடங்காத போராட்டம்.. 17 பேர் பலி.! 2 முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா.!

பெரு நாட்டு மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை மேற்கோள் காட்டி, அமைச்சர்கள் பாட்ரிசியா கோரியா மற்றும் ஜெய்ர் பெரெஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார்.

பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற எம்.பிக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து துணை ஜனாதிபதியாக இருந்த டினா போலுவார்டே புதிய ஜனாதிபதியாக இம்மாதம் பொறுப்பேற்றார். ஜனாதிபதி மாற்றப்பட்டதற்கும், பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்த போராட்டம் பல்வேறு இடஙக்ளில் கலவரமாக மாறி வருகிறது. இதுவரை இந்த போராட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்த புதிய அரசு அவசர நிலையை அறிவித்து ராணுவத்தினரை களமிறக்கி போராட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்த உயிரிழப்புகளை மேற்கோள் காட்டி, பெரு நாட்டின் கல்வி அமைச்சர் பாட்ரிசியா கோரியா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்ர் பெரெஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment