தேர்தல் அறிக்கையை சுற்றித்தான் எங்களது பரப்புரை… பா.சிதம்பரம்

Election2024: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்று பா.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் தயார் செய்த 5 தலைப்புகளின் கீழ் 25 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், சாதிவாரி கணக்கெடுப்பு, நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் கட்டாயம் இல்லை, 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி, கல்வி கடன் ரத்து,  இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாது, குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வாக்குறுதிகள் உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது, சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.  எங்கள் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். தேர்தல் அறிக்கையை சுற்றித்தான் எங்கள் பரப்புரை இருக்கும்.

தேர்தல் அறிக்கையில் சொன்ன கருத்துகளுக்கு எதிராக கருத்துகளை வரவேற்கிறோம். எங்கள் கருத்துக்களுக்கு பாஜக உடன்படாது என எனக்கு தெரியும். இந்திய அரசியல் அமைப்பினுடைய சமஸ்டி அரசு அமைப்பு முறைக்கு பாஜக விரோதமானவர்கள் என்று நாங்கள் குற்றசாட்டிக்கிறோம் என்று தெரிவித்தார். எங்கள் கூட்டணியில் எல்லாம் கருத்துக்களுக்கும் உடன்பட்டு தான் இருக்கிறது.

திமுக, காங்கிரஸ் அறிக்கைகள் ஒத்துப்போவது இயற்கையான ஒன்றுதான். முரண்பட்ட கூட்டணியை காங்கிரஸ், திமுக அமைக்கவில்லை. எனவே, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்