அம்பேத்கர், பகத்சிங் படங்களுக்கு மட்டும் அனுமதி! – டெல்லி முதல்வர் அதிரடி அறிவிப்பு!

டெல்லியில் அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வைக்கமாட்டோம் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு.

டெல்லியில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலங்களிலும் அரசியல்வாதிகளுக்குப் பதிலாக டாக்டர் பிஆர் அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இனி அரசு அலுவலங்களில் முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையும் வைக்க மாட்டோம் என்று குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரால் தான் உண்மையிலேயே ஈர்க்கப்பட்டதாகவும், டாக்டர் அம்பேத்கரின் போராட்டங்களை நினைவுகூர்ந்த அவர், இணையம் இல்லாத நேரத்தில், டாக்டர் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் தனது கல்வியைத் தொடர்ந்தார் என குறிப்பிட்டார்.

அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம், நாட்டிற்காக பெரிய கனவு காண வேண்டும். ஏழை, பணக்கார குடும்பம் என்ற பாகுபாடின்றி நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது டாக்டர் அம்பேத்கரின் கனவு. ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வேண்டும் என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இன்று உறுதியளிக்கிறோம். அந்த புரட்சியை கடந்த ஏழு ஆண்டுகளில் கல்வித்துறையில் கொண்டு வந்துள்ளோம்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லி அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பார்வையிட்டார், எங்களின் சான்றிதழைப் பெற்றுள்ளோம். 2015 ஆம் ஆண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) ஆட்சி அமைத்தபோது, ​​கேஜ்ரிவால் அவர்கள் முதலில் கல்விக்கான பட்ஜெட்டை வெறும் 5-10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி, அதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை சரிசெய்ததாகக் கூறினார்.

குழந்தைகளை நாட்டின் நல்ல குடிமக்களாக உருவாக்குவதில் தில்லி அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்காக தியானம் மற்றும் அறநெறிக் கதைகள் எடுக்கப்பட்ட ‘மகிழ்ச்சி வகுப்புகள்’ தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். டெல்லி அரசின் ‘பிசினஸ் பிளாஸ்டர்ஸ்’ திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு கெஜ்ரிவால், நாங்கள் தொழில்முனைவோர் வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம். குழந்தைகள் இப்போது வேலை தேட விரும்பவில்லை, மாறாக அவற்றை வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த சிந்தனையின் மாற்றம் ஒரு பெரிய வளர்ச்சி.

“நாங்கள் ‘தேசபக்தி’ வகுப்புகளையும் தொடங்கியுள்ளோம். சர்வதேச கல்வி வாரியமான ‘ஐபி’யுடன் இணைந்த கல்வி வாரியத்தை துவக்கியுள்ளோம். டெல்லியில் ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகத்தை உருவாக்கி வருகிறோம். பகத் சிங் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் பாதைகள் வேறுபட்டவை, ஆனால் அவர்களின் கனவுகள் ஒன்றே என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார். இருவரும் சமத்துவம், பாகுபாடு இல்லாத நாட்டைக் கனவு கண்டார்கள், புரட்சியைக் கனவு கண்டார்கள். இன்று அதே புரட்சிதான் எங்களின் கனவாகவும் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்