விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட  முதியவர் உயிரிழந்த வழக்கு.. மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

முதியவர் உயிரிழந்த வழக்கில் தமிழக தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்காசி மாவட்டம், வாகைக்குளத்தை சேர்ந்தவர், அணைக்கரை முத்து. 74 வயதாகும் இவர், விவசாயம் பார்த்து வருகிறார். அவரின் வயலில் கடந்த சில தினங்களாகள் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்த நிலையில், அரசின் விதிகளை மீறி, தனது விளைநிலங்களை சுற்றி மின் வேலிகளை அமைத்தார்.

இதுகுறித்து கடையம் பகுதி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, விவசாயி முத்துவை கடயம் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அவரும் நேற்று முன்தினம் மாலை ஆஜராகி, மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டு, அதற்கான அபராதத்தை காட்டுவதாக தெரிவித்தார்.

அப்பொழுது அவர்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட காரணத்தினால், அவரை கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் வனத்துறை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என உறவினர்கள் குற்றம் சாற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதியவர் உயிரிழந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தலைமை வனக்காவலர் 4 வாரத்திற்குள் உரிய பதிலளிக்கக்கோரி மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.