இந்தியாவில் 90 சதவீத கொரோனா பாதிப்பு இந்த 8 மாநிலங்களில் மட்டும்- மத்திய அரசு!

இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உட்பட 8 மாநிலங்களில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பின் 90 சதவீதம் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த உயிரிழப்புகளில் 80 சதவீதம் 32 மாவட்டங்களில் இருக்கின்றன.

கொரோனா அதிகம் பாதித்த அந்த 8 மாநிலங்களுக்கு மொத்தமாக 21.3 கோடி N95 முகக்கவசங்களும், 1.2 கோடி பாதுகாப்பு உடைகள், 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த அறிவிப்பில், கொரோனா பாதிப்புகளை முன்னரே அறிந்து இந்தியா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.