உபரி நீரை தான் தர முடியும்.. உரிய நீரை தர முடியாது.! கர்நாடகாவுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்.!

கர்நாடக அரசு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டிய விவகாரம் தற்போது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அதிகாரிகள், காவிரி ஒழுங்கற்று வாரியம், உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், தங்களிடம் போதிய அளவு தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அதிகாரிகள் வினாடிக்கு 12,500 கனஅடி நீரை திறக்க வேண்டும் என கோரிக்கை  வைக்கப்பட்டது. பல்வேறு வாக்குவாதங்களை அடுத்து இறுதியில் தமிழகத்திற்கு வரும் அக்டோபர் 15ஆம் தேதி வரையில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான உரிய அளவு நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவேரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, 192 டி.எம்.சி. அடி நீராக இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 177.25 டி.எம்.சி. அடி அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுப்பது உபரி நீரைத்தான் தர முடியும், உரிய நீரை தரமுடியாது என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.

அண்மையில், டெல்லியில் நடைபெற்ற காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் 12,500 கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்த நிலையில், இன்று முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமென்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை அளிக்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், காவேரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள 3,000 கன அடி நீரை கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அவர்கள் தண்ணீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை என்றும், இதுகுறித்து காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றும், இதுகுறித்து சிறப்பு சட்டசபை கூட்டத் தொடர் நடத்தி விவாதிக்கப்படும் என்றும், வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால்தான் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்.

கர்நாடக அரசின் செயல்பாடுகள் அனைத்துமே நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கின்ற நிலையில், பன்மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் முரணாக கர்நாடக அரசு செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மீறும் செயலாகும்.

தமிழகத்தின் உரிமையை பறிக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்ற நிலையிலும், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்வினை ஆற்றாது இருப்பது தமிழக மக்களிடையே, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் உறைந்து போயுள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து மத்திய அரசின் மூலமாகவும்,  சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் மேலிடம் மூலமாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிடவும் தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.