பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பு

பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார்.

பின்னர் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். அகில இந்திய அளவில் ’இந்தியா’ கூட்டணியிலும் அங்கம் வகித்து வந்த நிதிஷ்குமார் அதிலிருந்து திடீரென விலகியதோடு இன்று தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைந்த நிதிஷ்குமார் அக்கட்சி ஆதரவோடு பீகார் முதல்வராக மீண்டும் இன்று பதவியேற்றார். அதன்படி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் பாஜக ஆதரவுடன், பாஜக ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரி இருந்தார். அந்த கடிதத்தில் தனக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார்.

ராஜினாமா செய்ய வாய்ப்பு.. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ் குமார்..?

இந்நிலையில் காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர், இதில் மூன்று பேர் பாஜக அமைச்சர்கள் ஆவர். இதோடு துணை முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்துக் கொண்டார். கடந்த 23 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment