#AUSvNZ: கேன் வில்லியம்சன் டக் அவுட்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அதிரடி வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி மற்றும் இறுதி டி-20 போட்டியில் நியூஸிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது.

இதனால் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப்பெ – ஆரோன் பின்ச் களமிறங்கினார்கள். தொடக்கத்தில் 2 ரன்கள் மட்டுமே அடித்து பிலிப்பெ வெளியேற, மத்தியூ வேடு களமிறங்கினார். ஐவரும், மறுமுனையில் இருந்த பின்ச் நிதானமாக ஆடிவந்தனர்.

36 ரன்கள் அடித்து பின்ச் வெளியேற, பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல், 1 ரன் மட்டுமே அடித்தார். அவரைதொடர்ந்து 44 ரன்கள் அடித்து வேடு வெளியேற, பின்னர் 26 ரன்கள் அடித்து ஸ்டோயினிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் அடித்தது.

143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே – மார்ட்டின் கப்தில் களமிறங்கினார்கள். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடிவந்தனர். 36 ரன்கள் அடித்து கான்வே வெளியேற, பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் டக் அவுட் ஆக, மறுமுனையில் இருந்த மார்ட்டின், அரைசதம் விளசி 71 ரன்கள் அடித்து வெளியேற, நியூஸிலாந்து அணி 15.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது. இதன்மூலம் டி-20 தொடரை நியூஸிலாந்து அணி, 3 – 2 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.