முகேஷ் அம்பானிக்கு தொடர் கொலை மிரட்டல்.! தெலுங்கானா இளைஞர் கைது.!

கடந்த அக்டோபர் 31ம் தேதி இந்திய தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியிடம் ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதே மின்னஞ்சலில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை கொலை மிரட்டல் வந்துள்ளது.

அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் ரூ.20 கோடி தர வேண்டும். தர மறுத்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை தொடர்ந்து, மும்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்ததாக, அக்டோபர் 28ம் தேதி 2வது இமெயிலில் ரூ.200 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தொகையை அதிகப்படுத்தி ரூ.400 கோடி கேட்டு 3வது கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று இமெயில்களும் ஷதாப் கான் என்ற ஒரே ஐடியிலிருந்து வந்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் மிரட்டல் விடுத்த நபரைக் கண்டுபிடித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 19 வயதான கணேஷ் ரமேஷ் வன்பார்தி என்ற இளைஞர் தான், முகேஷ் அம்பானிக்கு பலமுறை ஷதாப் கான் பெயரில் பலமுறை கொலைமிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாக அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து, அந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் 8 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து கூறிய போலீசார், “குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை நாங்கள் விசாரித்து வருகிறோம். அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய மின்னஞ்சல்கள் மற்றும் நெட்வொர்க் பற்றிய விவரங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.