மேட்டூர் மீனவர் ராஜா உயிரிழந்த விவகாரம்… மீன் வேட்டையா.? மான் வேட்டையா.?

கர்நாடக வனப்பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கொண்டு மான் பிடிக்க வந்தார்கள் அவர்களை தற்காப்புக்காக சுட்டோம். என்றும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே சென்றார்கள் என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனை அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி இரு மாநில எல்லையில் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோவிந்தம்பாடி எனும் ஊரை சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் இரண்டு படகுகளில் தமிழக மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் மீன் பிடிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினரால், விரட்டியடிக்கப்பட்டு இதில் ரவி மற்றும் இளைய பெருமாள் ஆகியோர் தப்பித்து தமிழக எல்லைக்குள் வந்து விட்டனர் எனவும் ,  ஆனால், ராஜா அப்போது காணாமல் போயிருந்தார் எனவும் தகவல் வெளியாகியது.

மான் வேட்டை : இது தொடர்பாக, கர்நாடக வனத்துறை சார்பில் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட பகுதியானது கர்நாடக வனப்பகுதி ஆகும். அங்கு மான்களின் நடமாட்டமும் யானைகள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். 4 மர்ம நபர்கள் அங்கு மான்களை வேட்டையாடுவதற்காக வந்துள்ளனர். அவர்களை பிடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் பதிலுக்கு நாங்களும் துப்பாக்கி சூடு நடத்தினோம் எனவும், இதில் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கி, ஒரு படகில் மான் சடலங்கள் ஆகியவற்றை போட்டுவிட்டு ஓடிவிட்டனர் என கூறியுள்ளனர்.

மீன்பிடிப்பு : ஆனால், இங்கு மீனவர் தரப்பில் இருந்து, இரண்டு படகுகளிலும் வழக்கம் போல மீன்பிடிப்பதற்காகவே மூவரும் சென்றனர்  என்றும். நள்ளிரவில் மீன்கள் அதிகமாக கிடைக்கும் என்பதாலும், கடந்த செவ்வாய் நள்ளிரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர் எனவும், அப்போது கர்நாடக வனத்துறையினர் அத்துமீறி விரட்டி அடித்தனர் என கூறபட்டுள்ளது.

மீனவர் ராஜா சடலம் : இந்த நிலையில் மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த ராஜா எனும் மீனவர் நேற்று ஈரோடு மாவட்ட எல்லை பகுதிக்கு உட்பட்ட பாலாறு தேங்கும் காவிரி ஆற்றங்கரை ஓரம் கடலமாக உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை அடுத்து அப்பகுதி மிகவும் பதற்றமான சூழ்நிலைக்கு உள்ளானது.

எல்லை பதட்டம் : அங்கு கிராம மக்கள் ஒன்று கூடி போராட ஆரம்பித்து விட்டனர். இதனால் இரு மாநில எல்லை பகுதிகளும் பதட்டமான சூழ்நிலைகள் நிலவியதால் , அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், பாலாறு வழியாக தமிழக – கர்நாடக எல்லை போக்குவரத்தானது நிறுத்தப்பட்டு இருந்தது. மேலும், இது குறித்து பேசுவார்த்தை நடத்துவதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் ஈரோடு – சேலம் காவல்துறை உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

கொலை வழக்கு : இதற்கிடையில், நேற்று மாலை மீனவர் ரவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரத பரிசோதனை நேற்று செய்ய முடியாது என மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால் இன்று பிரத பரிசோதனை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதால் தான் மீனவர் ராஜா உயிரிழந்துள்ளார். ஆகவே கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்மை நிலவரம் : கர்நாடக வனத்துறை தரப்பில் மான்களை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வந்தார்கள் என்றும் அவர்கள் நாட்டு துப்பாக்கியால் சுட்டனர் என்றும் கூறியுள்ளனர். தமிழக மீனவர்கள் தரப்பில் ரவி, இளையபெருமாள், உயிரிழந்த ராஜா ஆகியோர் ஆற்றங்கரையில் மீன் பிடிக்கவே சென்றார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்று அரசு அதிகாரிகள் உரிய முறையில் விசாரணை நடத்தி இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பலரது நோக்கமாக இருக்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment