, ,

இந்த தீபாவளியை ஆரோக்கியமானதாக கொண்டாடலாமே …!

By

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் பலகாரமும் தான். அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு செல்வது ஒரு புறம் இருந்தாலும் நாள் முழுவதும் பட்டாசு வெடித்து பலகாரங்களை உண்பது தான் தீபாவளியின் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த ஒரு நாளை அனுபவிப்பதற்காக மற்ற நாட்களை சங்கடப்படுத்தி விடக்கூடாது.

   
   

அதாவது, ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய நபர்கள் அனைவருமே தீபாவளி வந்துவிட்டாலே கட்டுப்பாடின்றி பலகாரங்களை உண்ண தொடங்கி விடுகின்றனர். இதனால் சிலர் நோய்வாய்ப்பட நேரிடுகிறது. எனவே தீபாவளியை எப்படி ஆரோக்கியமான முறையில் கொண்டாடுவது என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இனிப்பு பலகாரங்கள்

சர்க்கரை நோயாளிகள் : நெய், எண்ணெய், மைதா, வெண்ணெய், வனசுபதி போன்ற அதிக கொழுப்பு நிறைந்த பொருட்களை மூலமாக செய்யக்கூடிய இனிப்பு பலகாரம் தான் பெரும்பாலும் தீபாவளி சமயங்களில் செய்யப்படுகிறது. இதில் எந்த பொருட்களில் செய்யப்பட்ட இனிப்பாக இருந்தாலும் அது நமது உடலில் சேரும் பொழுது அது நமக்கு பிரச்சனை தான்.

குறிப்பாக சர்க்கரை நோயாளி ஒருவர் இதில் நாள் ஒன்றுக்கு ஒரு வகை ஸ்வீட் சாப்பிட்டால் கூட அது அவரது உடலில் அதிக அளவு கலோரியை உருவாக செய்யும். இதற்கு தீர்வு உடற்பயிற்சி செய்வது தான். ஆனால், உடற்பயிற்சி செய்யாமல் தொடர்ச்சியாக தீபாவளி சமயங்களில் கொழுப்பு நிறைந்த இனிப்புகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோயாளிகளின் கலோரிகள் அதிகரித்து மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

இனிப்பு தீமைகள் : அதிக இனிப்புகள் சாப்பிடுவதால் இடுப்பை சுற்றியுள்ள தசைகள் கூடுவதுடன், பற்குழி,பல் வலி என பல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். மேலும் இந்த இனிப்பு பலகாரத்தில் உள்ள ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் இன்சுலின் சுரப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உருவாக இது காரணமாக அமையும்.

மேலும் அதிக இனிப்பு சுவை கொண்ட பலகாரங்களை நாம் சாப்பிடுவது மூளையில் சுரக்கும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். மேலும் உடலின் கொழுப்பு அளவையும் அதிகரிக்க செய்யும். குறிப்பாக சிறுவர்களுக்கு ஹெச்டி எனப்படும் ஹைபர் ஆக்டிவிடி ஏற்படும். பெரியவர்களுக்கு அல்சைமர் என்ற மறதி நோயை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இனிப்பு மூலமாக உடலில் சேரக் கூடிய கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் உடல்பருமன் நிச்சயம் ஏற்படும். மேலும் குழந்தை பருவத்தில் உடல் பருமன் வருவதற்கு முக்கிய காரணமாக இனிப்புகள் தான் இருந்து வருகிறது.

எண்ணெய் ஆரோக்கியம் : தீபாவளியன்று நாம் வீட்டில் செய்யக்கூடிய பலகாரமாக இருந்தாலும், வெளியில் கடையில் வாங்கி உண்ணக் கூடிய பலகாரமாக இருந்தாலும் பெரும்பாலும் எண்ணெயில் பொரித்து செய்யக்கூடியது தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில் நாம் வீட்டில் செய்யக்கூடிய பலகாரங்களை பெரும்பாலும் ஆரோக்கியமான எண்ணையில் தான் செய்வோம்.

ஆனால் கடைகளில் நீண்ட நாட்கள் இருப்பு உள்ள எண்ணெய்களில் சில சமயங்களில் இனிப்புகள் செய்யப்படுகிறது. எனவே வீட்டில் உள்ள புதிய ஆரோக்கியமான சமையல் எண்ணெயை பயன்படுத்துவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்க உதவும். ஒரு முறை பலகாரம் செய்த எண்ணையை வைத்திருந்து, மீண்டும் பலகாரம் செய்வது மிகவும் தவறு.

பட்டாசு

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பது வழக்கம் தான். ஆனால் அதிக அளவில் பட்டாசு வெடிப்பதால் சுவாசப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசு புகையை நேரடியாக சுவாசிப்பது குழந்தைகளை மிகவும் பாதிக்கும். எனவே பட்டாசு வெடிக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு துணியை முகத்தில் கட்டிக்கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும்.

மேலும் தூரத்தில் வைத்து பட்டாசு வெடிப்பது மிகவும் நல்லது. அது போல கம்பி மத்தாப்பு குழந்தைகள் கையில் வைத்து சுற்றும் பொழுது பெற்றோர்கள் கண்டிப்பாக அருகிலிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும்.

Dinasuvadu Media @2023