பறந்து வரும் கருந்துகள்களால் அச்சத்தில் மதுரை தத்தனேரி மக்கள்..!

மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இரவு பகலாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வருவதால் கரும்புகையுடன் கருந்துகள்கள் பறந்து வருவதாக அருகில் குடியிருக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை செல்லூர் பகுதியில் தாகூர் நகர் மக்கள் இது குறித்து கூறுகையில், தத்தனேரி மின்மயானத்தில் இரவு பகலாக 60-க்கும் மேற்பட்ட கொரோனாவால் இறந்த உடல்கள் எரிக்கப்பட்டு வருவதால் அருகில் இருக்கும் வீடுகளிலும், மொட்டை மாடிகளிலும், தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களிலும், மக்கள் மீதும் கருந்துகள்கள் பரவுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் தத்தனேரி மற்றும் கீரைத்துறை ஆகிய இரண்டு மின்மயானங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தினமும் கொரோனா பரவலால் உயிரிழந்த உடல்கள் எரிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மீது அணியப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பைகள், PPE கிட்டுகளால் இந்த கருந்துகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்ததுகள் அருகில் வசிப்பவர்களின் மேல் படும் அபாயம் உள்ளதால் இதனால் கொரோனா வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் தோல் அழற்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இது குறித்து மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.