ரூ.4,000 லஞ்சம் கேட்ட மதுரை பில் கலெக்டர்..!-ரசாயனம் தடவிய பணத்தால் மாநகராட்சி ஊழியர் கைது..!

மதுரை மாவட்டத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு துறையால் நூதன முறையில் பிடிபட்டு கைதாகியுள்ளார்.       

மதுரை மாவட்டம் அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா, இவரின் மகன் ஈசுவரபிரசாத். ஈசுவரப்பிரசாத்திற்கு(46) அந்த பகுதியில் சொந்தமாக 2 கடைகள் இருக்கிறது. மேலும் இவரது தாயார் பரிமளாவின் பெயரில் ஒரு குடோன் உள்ளது. அதனால் இவற்றை சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக மதுரை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இந்த 3 இடங்களை சொத்துவரி மதிப்பீடு செய்து கொடுக்க அப்பகுதிக்குரிய பில் கலெக்டர் ஜெயராமன் லஞ்சம் கேட்டுள்ளார். 2 கடைகளுக்கு தலா ஆயிரம் ரூபாயும், குடோனுக்கு இரண்டாயிரம் ரூபாயும் என மொத்தமாக ரூ.4,000 ரூபாய் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிடில் சொத்துவரி மதிப்பீடு செய்து தரமுடியாது என கூறியுள்ளார்.

இதனால் ஈசுவரபிரசாத் மதுரையில் உள்ள லஞ்சம் ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த மாநகராட்சி ஊழியரை பிடிப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறை காவலர்கள் நூதன முறையை பின்பற்றியுள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில், குமரகுரு, சூர்யகலா, ரமேஷ் பிரபு ஆகிய இன்ஸ்பெக்டர்கள் ரசாயன பவுடர் தடவியிருக்கக்கூடிய 4,000 ரூபாயை ஈசுவரப்பிரசாத்திடம் கொடுத்து இதை கொடுக்க கூறியுள்ளனர்.

அதன்படி, மாநகராட்சி ஊழியர் ஜெயராமனிடம் ரசாயனம் தடவிய 4,000 ரூபாயை ஈசுவரப்பிரசாத் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயராமனை பிடித்து கைது செய்துள்ளனர்.