இன்றுடன் நிறைவடைகிறது சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! 3-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கியது..!

கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்த நிலையில், இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.

முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற 2-வது நாள் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் உறுப்பினர் இராசேந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து,  வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ‘சமாதானம்’ எனும் புதிய திட்டத்திற்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.

இந்த புதிய திட்டம் குறித்து முதல்வர் பேசுகையில், ரூ.50 ஆயிரத்திற்கும் கீழ் உள்ள தொகைக்கான வணிகவரி, வட்டி, அபராத தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்து இருந்தார். இதன் மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயனடைவார்கள்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் 3-வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைய உள்ளது. தற்போது கேள்வி-பதில் நேரம் நடைபெற்று வருகிறது. வேளாண் மண்டலத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தையும் சேர்க்கும் வகையில், வேளாண் மண்டல திருத்த சட்ட முன் வடிவு தாக்கல் ஆக உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.