#Breaking:லக்கிம்பூர் வன்முறை -உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்டுகிறது.

பின்னர், ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் , பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்ற  பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்தனர்.

இதனையடுத்து,இன்று இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.அதன்படி,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஹியா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 16 ஆவது வழக்காக இன்றைக்கு பட்டியலிடப்பட்டது.

இதனையடுத்து,லக்கிம்பூர் வன்முறை துரதிர்ஷ்டவசமாக நடைபெற்றது.இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று உத்தரப்பிரதேச அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக,யாரெல்லாம் குற்றவாளிகள்?, யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டு,வழக்கை உச்சநீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது.