கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கோடநாடு வழக்கில் சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர். கோடநாடு வழக்குகளை தனிப்படை விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன் படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டனர்.  முன்னதாக இந்த வழக்கின் விசாரணையானது உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், தற்பொழுது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் உதகை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், குற்றத்தை நிரூபிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கால அவகாசம் வழங்க வேண்டுமென்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் இதுவரை நடைபெற்ற விசாரணை குறித்த தகவல்கள் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment