ஹார்லி டேவிட்சன் மற்றும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறங்கும் கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர்(Kawasaki Vulcan S. Crusager)..!

 

கவாஸாகி வல்கன் எஸ் க்ரூஸர்(Kawasaki Vulcan S. Crusager) பைக்கின் புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த டிசம்பர் மாதம் கவாஸாகி வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிமியம் க்ரூஸர் ரகத்தில் வந்த இந்த மாடல் கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் புதிய வண்ணக் கலவையில் வல்கன் எஸ் பைக் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி வல்கன் எஸ் பியர்ல் லாவா ஆரஞ்ச் என்ற பெயரில் இந்த புதிய வண்ணக் கலவை கிடைக்கும். கவாஸாகி வல்கன் எஸ் பைக் ஆண், பெண் இருபாலருக்குமான க்ரூஸர் ரக மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக, இதன் கால்கள் வைப்பதற்கான ஃபுட்பெக்குகளை ஓட்டுபவரின் உயரத்திற்கு தக்கவாறு மூன்று விதமான நிலைகளில் மாற்றிக் கொள்ள முடியும்.

கவாஸாகி நின்ஜா 650 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 649சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 60.2 பிஎச்பி பவரையும், 62.78 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கவாஸாகி வல்கன் எஸ் பைக் 705மிமீ இருக்கை உயரத்தை பெற்றிருக்கிறது.

235 கிலோ எடை கொண்டது. 130 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருப்பதால், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக்கின் முன்சக்கரத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 250மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. கருப்பு வண்ண வல்கன் எஸ் பைக் ரூ.5.48 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த புதிய வண்ண மாடல் ரூ.5.58 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750, ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்களுடன் இந்த புதிய கவாஸாகி வல்கன் எஸ் பைக் போட்டி போடும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment