இஸ்ரேல் ராணுவ ஒப்பந்த சர்ச்சை.! 28 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய கூகுள்.!

Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குலை 6 மாதங்கள் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1200 பேரும், காசா நகரில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நிறுத்த பல்வேறு நாடுகள், தன்னார்வ சமூக அமைப்பினர்கள் இஸ்ரேலிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்படியான சூழலில், இஸ்ரேல் ராணுவத்துடன், கூகுள் நிறுவனம் ஓர் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் சர்வீஸ் எனும் இணையவழி சேமிப்புகள் தொடர்பாக சேவைகள் அளிக்க கூகுள் நிறுவனம், அமேசான் நிறுவனத்துடன் இணைந்து 1.2 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் செய்து இருந்தது.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து, நியூயார்க் மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள கூகுள் நிறுவன ஊழியர்கள் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நோ டெக் (No Tech) எனும் அமைப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. முதற்கட்டமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டபோது வளாகத்தில் அத்துமீறியதாக நிறுவனம் அளித்த புகாரின்பேரில் பாதுகாப்பு காரணங்களுக்காக 9 பேர் அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வளாகத்தில் மற்ற ஊழியர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தது, நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றசாட்டுகளும் போராடிய ஊழியர்கள் மீது முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற கூகுள் நிர்வாக விசாரணைக்கு பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டதில் முக்கிய நபர்களான 28 ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.