இஸ்ரேல்-ஹமாஸ் போர் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.!

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயும் தொடர் பனிப்போர் நிலவி வருகிறது.

காசாவில் நுழைந்து தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்!

இந்த விவகாரம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அண்மையில் கூறுகையில், கடந்த வாரத்தில் ஈராக்கில் 12 முறையும், சிரியாவில் 4 முறையும் அமெரிக்க படைகள் தாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கப்பட்டால், அமெரிக்கா பதிலளிக்கும் என்று ஈரான் முக்கிய தலைவர் அயதுல்லாவை எச்சரித்ததாகக் கூறினார்.

ஜான் கிர்பி மேலும் கூறுகையில், அய்யதுல்லாவுக்கு ஜோ பைடனின் எச்சரிக்கை என்னவென்றால், அவர்கள் அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதலை நகர்த்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அதற்க்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க பதிலடிக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஜான் கிர்பி தெரிவித்தார்.

ஆனால் , அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் தலைவர் அய்யதுல்லாவுக்கு எவ்வாறு தனது எச்சரிக்கை செய்தியை தெரிவித்தார் என்ற முழு விவரத்தை அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கவில்லை.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.