7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரையும் வென்றது!.

இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில், இன்று மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்தது.

இதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்தது. 28 ஓவர்களுக்குள் அந்த அணி 99 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த 99 ரன் ஸ்கோரானது இந்தியாவிற்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் குறைந்த பட்ச ஸ்கோர் ஆக பதிவாகியுள்ளது. இதற்கு முன் நைரோபியில் நடைபெற்ற போட்டியில் 117 ரன்கள் அடித்ததே தென்னாபிரிக்காவின் குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 49 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஒருநாள் தொடரை   2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment