காட்டடி அடித்த பாண்டியா.. 6 விக்கெட் வித்தியாசத்தில் டி-20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியதை தொடர்ந்து, முதல் டி-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 194 ரன்கள் அடித்தது. 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் களமிறங்கினார்கள். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த கே.எல்.ராகுல் 30 ரன்களில் வெளியேற, பின்னர் கோலி களமிறங்கினார்.

கோலி – தவான் கூட்டணியில் இந்திய அணியின் ஸ்கொர் உயர, அரைசதம் விளாசிய தவான் 52 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப, 40 ரன்கள் அடித்து கோலி தனது விக்கெட்டை இழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் – ஹர்திக் பாண்டியா கூட்டணி களமிறங்கியது. இதில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆட, 19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. அதுமட்டுமின்றி, டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.