IND vs SA : ஒருநாள் போட்டிக்கான தொடரில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படமாட்டார்!

உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை முதல் 21ம் தேதி வரை ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்க மாட்டார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

ராகுல் ட்ராவிட் மட்டுமின்றி, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் என்று யாரும் செயல்படமாட்டார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிச.26ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி வீரரர்கள் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் முகாமிட்டுள்ளனர்.

உச்சகட்ட விரக்தியில் மும்பை ரசிகர்கள்… ஒரே நாளில் இவ்வளவு லட்சமா?

எனவே, டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் பங்கேற்க இருக்கும் நிலையில், ராகுல் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்கள் ஒருநாள் தொடரில் செயல்படமாட்டார்கள் என கூறப்படுகிறது. அதாவது, இதுவரையில் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றாத நிலையில், இம்முறை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், நாளை தொடங்கவுள்ள ஒருநாள் தொடரில் விவிஎஸ் லட்சுமணன், சிதான்ஷூ கோடக் (பேட்டிங் பயிற்சியாளர்), அஜய் ராத்ரா (பீல்டிங் பயிற்சியாளர்), ராஜீப் தாத்தா (பவுலிங் பயிற்சியாளர்) ஆகியோர் பயிற்சியாளர்களாக செயல்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், மீண்டும் வரும் டி20 உலகக் கோப்பை வரையில் அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக பிசிசிஐ நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்