மீண்டும் நாடு திரும்புவேன் – ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்த ஆப்கன் அதிபர் அஷ்ஃரப் கனி!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் அதிபர் அஷ்ஃரப் கனி சமூக வலைத்தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரை.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிபர் அஷ்ஃரப் கனி தலைமையிலான அரசுக்கு எதிராக தாலிபான்களுக்கும், அரசு படைகளுக்கு இடையே கடும் போர் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிசூடு மற்றும் குண்டு வெடிப்புகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடைசியா ஆப்கான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்து, ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் போர் முடிவுக்கு வந்ததாகவும், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என பொது மன்னிப்பு கேட்டியிருந்தனர்.

தலைநகர் காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ஃரப் கனி, தனது குடும்பத்தினர் சிறப்பு விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், அதிபர் அஷ்ஃரப் கனி நான்கு கார்களில் பணத்தை நிரப்பிக்கொண்டு, ஹெலிகாப்டர்களுடன் தப்பி  ஓடியதாகக் தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆப்கான் அதிபர் அஷ்ஃரப் கனி தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு விவகாரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் அஷ்ஃரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றுள்ளோம் என தெரிவித்துள்ளது.

காபூலில் பேரழிவு நிகழக்கூடாது என்பதால் நாட்டை விட்டு வெளியேறினேன். மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பி நாட்டின் இறையாண்மைக்கு போராடுவேன் என ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் அதிபர் அஷ்ஃரப் கனி சமூக வலைத்தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

மேலும், நான் பெட்டி, பெட்டியாக பணத்தை எடுத்துக்கொண்டு ஓடியதாக கூறப்படுவது தவறு என்றும் எந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு செல்லவில்லை, உடை மற்றும் காலனி மட்டும் தான் என்னிடம் உள்ளது என விளக்கமளித்துள்ளார். இதனிடையே, ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அதிபர் அஷ்ஃரப் கனி தான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்