தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன் – கவிஞர் வைரமுத்து

12-ஆம் வகுப்பு தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்ற நிலையில், தங்கபேனாவை பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து ட்வீட். 

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது.

பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார். இந்த தேர்வில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண்குலத்தின் பெருமை சொல்கிறது. எப்படிப் பாராட்டுவது? அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன். உன் கனவு மெய்ப்படவேண்டும் பெண்ணே!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.