“நான்தான் காங்கிரஸ் வேட்பாளர்”- விருத்தாச்சலம் தொகுதியில் மனுதாக்கல் செய்தவரால் பரபரப்பு!

விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி நீதிராஜன் என்பவர் மனுதாக்கல் செய்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்த நிலையில், தற்பொழுது எஞ்சிய 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் சார்பில் விருத்தாச்சலம் தொகுதியின் வேட்பாளராக ராதாகிருஷ்ணனை அறிவித்தது. அவர் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், நான்தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எனக்கூறி அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நீதிராஜன் என்பவர், காங்கிரஸ் கொடியுடன் திரளான தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி, தனது அதிகாரப்பூர்வமான வேட்பாளரான ராதாகிருஷ்ணனை அறிவித்ததை தொடர்ந்து, தற்பொழுது நீதிராஜன் மனு தாக்கல் செய்துள்ளது, பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும், அத்தொகுதியில் யார் வேட்பாளர் என்ற குழப்பம் நிலவியது. இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த தொகுதியை சார்பற்றவர், இந்த தொகுதியை ராதாகிருஷ்ணனுக்கு கொடுத்தாலும் வீணாகிவிடும், தோல்வியடைந்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.