ஜப்பானை அச்சுறுத்தும் லூபிட் புயல் – 3 லட்சம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு!

லூபிட் எனும் சக்திவாய்ந்த புயல் ஜப்பானை கடுமையாகத் தாக்கும் என கூறப்பட்டுள்ளது.

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் எனும் சக்தி வாய்ந்த புயல், தற்போது ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்களை கடுமையாக தாக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது .

மேலும் ஜப்பானின் ஹிரோஷிமா, ஷிமனே மற்றும் எஹிம் ஆகிய மூன்று பிராந்தியங்களிலும் புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மூன்று பிராந்தியங்களில் இருக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த லூபிட் புயல் காரணமாக ஜப்பானின் தெற்கு மற்றும் தென் மேற்குப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Rebekal