இலங்கை தாக்குதல்.. சிறை சந்திப்பு.. கோவை கார் வெடிப்பில் வெளிவரும் பரபரப்பு தகவல்கள்….

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பரோஸ் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் இருப்பவர்களை சந்தித்து பேசியுள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது.

இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக அவருக்கு நெருக்கமான முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் என 5 பேரை தமிழக காவல் துறையினர் முதற்கட்டமாக கைது செய்தனர்.

இதனை அடுத்து நடைபெற்ற சோதனையில், அப்சர் கான் என்பவர் 6வது நபராக கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சோதனை கோவையை தாண்டி திருநெல்வியிலும் தொடர்ந்தது. நெல்லையில், முகமது காதர், முகமது உசேன் ஆகியோரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தினர். அவர்கள் வீட்டிலும் சோதனை செய்தனர்.

அதன் பிறகு, தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கையின் பேரில், இந்த வழக்கு, தமிழக காவல் துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் வெளியாகி உள்ளன. அதாவது, முதற்கட்டமாக கைதானவர்களில் பரோஸ் இஸ்மாயில், என்ஐஏவால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் உள்ள ரஷீத் அலி, முகமது அசாருதீன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

மேலும், முகமது அசாருதீன், 2019இல் இலங்கையில் நடந்த தேவாலய தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதலால்  ரஷீத் அலி, முகமது அசாருதீன் உடனான சிறை சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என்பது பற்றி என்ஐஏ அதிகாரிகள் பரோஸ் இஸ்மாயிலிடம் தீவிர விசாரணையில் ஈடுபாடு வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment